பிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் !

தமிழ் சினிமாவின் இளம் திறமைகளுள் ஒருவராக வளர்ந்து வருபவர்  இசையமைப்பாளர் தரண். இவர் சமீபத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால் ஆச்சர்யமாக அவருக்கு கிடைத்த   ஒரு பிறந்த நாள் பரிசு அவர் வாழ்வில் மறக்கமுடியாத பேரின்பமாக அமைந்தது. இன்னும் அந்த சந்தோஷ அதிர்ச்சியிலிருந்து மீளாதவராக அதனை கொண்டாடி வருகிறார். இசையமைப்பாளர் தரண் தமிழகத்தின் சூப்பர்ஸடார் ரஜினிகாந்தை பிறந்த நாளில் சந்தித்த நிகழ்வு தான் அது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த நிகழ்வு குறித்து இசையமைப்பாளர் தரண் பகிர்ந்துகொண்டது…

இப்போது என்னுள் பரவும் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இன்னும் பிரமை பிடித்த நிலையில் தான் இருக்கிறேன். சூப்பர்ஸ்டாரை சந்திக்க வேண்டுமென்பது என் சிறு வயதுமுதலான கனவு.  நானும் என் மனைவியும் அவரது தீவிர ரசிகர்கள். கடந்த 25 வருடங்களாக அவரது படங்களை முதல் நாள்,  முதல் ஷோ பார்க்கத் தவறியதில்லை. அவரைச் சந்தித்த தருணம் வாழ்வின் உன்னதமான ஒன்றாக அமைந்தது. அவர் வீட்டில் எங்களை உபசரித்த விதம் மறக்க முடியாதது. லதா ரஜினிகாந்த் மேடம் என்னை தங்களின் மகன் போலவே பாவித்தார்கள்.  வீட்டில் கொலு நடக்கும் மிக முக்கியமான தொடர் வேலைகளிலும், அனைவரிடமும் மறக்காமல் என்னை அறிமுகப்படுத்தினார்கள். 15 வருடங்கள் முன்பாக  எனது முதல் ஆல்பமான பாரிஜாதத்தை சூப்பர்ஸ்டார் அறிமுகப்படுத்தினார். இப்போது மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவருடன் அவர் வீட்டில் கிடைத்த நெருக்கமான  சந்திப்பு, அவருடன் கழித்த தருணங்கள், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என் வாழ்வின் மறக்கமுடியாத பொன்னான நினைவுகள் என்றார்.

இசையமைப்பாளர் தரண்  சமீபத்திய ஹிட் மற்றும்  , இளைஞர்களின் ஃபேவரைட் ஆல்பமான “பப்பி” படத்திற்க்கு இசையமைத்துள்ளார். இதில் தமிழ் சினிமாவின் பெரும் பிரபலங்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஆர் ஜே பாலாஜி, கௌதம் மேனன் ஆகியோர் பாடல்கள்  பாடியுள்ளார்கள். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷன்ல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படம்  வருண், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் நாளை (11-10-2019) வெளியாகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*